தொலைக்காட்சி, புகைப்படம்
உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர்.
உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.
எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)
நூல் : புகாரி 3224, 5957
உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால்'தமாஸீல்' ஸுரத்' ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும்.
இந்தச் சொற்கள் மூன்று பரிமாணம் உள்ள உருவச் சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது; எனவே இரண்டு பரிமாணமுள்ள எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.
ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 3224, 5954
திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
உருவச் சிலைகளும், உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1601,
மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3351)
இப்றாஹீம் (அலை), மர்யம் (அலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லடியார்களுக்கு இதில் விதி விலக்கு எதுவும் இல்லை. நல்லடியார்களுக்கு சிலை வடிப்பதிலும், வரைவதிலும் தான் ஈமானுக்கு ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உருவப் படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா?
அதில் ஏதேனும் விதி விலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக