தூண்களின்றி வானங்களை
வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.
-திருக்குர்ஆன் 13:2
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.
-திருக்குர்ஆன் 31:10
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. 'வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது' என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக